Sunday 2 March 2014

ராஜாஜி வாழ்க்கைப்பாதை



1917_ல் சென்னை வந்த காந்தியை ராஜாஜி முதலில் சந்தித்துப் பேசினார். காந்தியுடனான இந்த முதல் சந்திப்பைத் தொடர்ந்து பொது வாழ்வில் தீவிரமாக ஈடுபடலானார். ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து அதன் தீர்மானப்படி வக்கீல் தொழிலை விட்டு விலகினார்.

போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். சட்டமறுப்பு இயக்கத்தில் சேருவதற்கு முன்பு நகரசபை தலைவர் பதவியையும் தூக்கி எறிந்தார். வேலூரில் தடை உத்தரவை மீறி 3 மாதம் சிறை தண்டனை பெற்றார். காந்தி நடத்திய "யுவ இந்தியா" என்ற இதழை ராஜாஜி சிறிது காலம் நடத்தினார். பின்னர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு காங்கிரசை விட்டு விலகினார். 

மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, கதர் இயக்கம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்திய அவர் திருச்செங்கோட்டை அடுத்த புதுப்பாளையத்தில் "காந்தி ஆசிரமம்" என்ற ஆசிரமத்தைத் தொடங்கி கிராம மக்களுக்கு கல்வி, வைத்திய சேவை முதலியவற்றில் ஈடுபட்டார்.மதுவிலக்கு பிரசாரத்துக்காக "விமோசனம்" என்ற பத்திரிகையை நடத்தினார்.

காங்கிரசை விட்டு கொஞ்ச காலம் விலகி இருந்த ராஜாஜி, காந்தியின் அழைப்பை ஏற்று 1930_ல் மீண்டும் அரசியல் பணியைத் தொடங்கினார். காங்கிரஸ் செயலாளர் பொறுப்பு ஏற்றார். அவரது செல்வாக்கு அதிகரித்தது. உப்பு சத்தியாகிரகத்தின்போது ராஜாஜி திருச்சியில் இருந்து தொண்டர்களுடன் வேதாரண்யத்துக்கு நடந்தே யாத்திரை சென்று கடற்கரையில் உப்பு எடுத்தார்.

அவருக்கு 9 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. ராஜாஜி, சிறையில் இருந்து விடுதலையான பிறகு தனது இளைய மகள் லட்சுமிக்கும், காந்தியின் இளைய மகன் தேவதாசுக்கும் திருமணம் செய்து வைத்தார். 1933 ஜுன் 16_ந்தேதி புனா அருகில் உள்ள பர்ணகுடி என்ற இடத்தில் நடந்த இந்தத் திருமணம், சீர்திருத்தத் திருமணம், கலப்புத் திருமணம் ஆகும். 

மணமக்கள் கதராடை அணிந்து கதர் நூல் மாலை மாற்றிக்கொண்டார்கள். மணமக்களுக்குப் பகவத்கீதை, அருள் நெறிப்பாடல்கள் முதலியவற்றைக் காந்தி பரிசளித்தார். வெள்ளையர் ஆட்சியின்போது, 1937_ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து சென்னை மாகாண முதல்_மந்திரியாக ராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மதுவிலக்கு கொள்கையில் தீவிரமாக இருந்த ராஜாஜி முதலில் சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை கொண்டு வந்தார். பின்னர் படிப்படியாக மாநிலம் முழுவதும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட விற்பனை வரியைக் கொண்டு வந்தார். 

2_ம் உலகப்போரில் இந்தியாவைப் பிரிட்டிஷ் அரசு ஈடுபடுத்தியதைக் கண்டித்து எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் அரசு பதவி விலகியது. அதே போல ராஜாஜியும் பதவி விலகினார். பின்னர் நடந்த தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்ட ராஜாஜி சென்னையில் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு 9 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. 1942_ல் பாகிஸ்தான் கோரிக்கையை முஸ்லிம் லீக் வலியுறுத்தியது. "பாகிஸ்தான் பிரிவினைக்கு சம்மதிப்போம். அப்படி செய்தால்தான் சுதந்திரம் கிடைக்கும்" என்றார், ராஜாஜி. அதை காங்கிஸ் தலைவர்கள் எதிர்த்தனர். இதன் காரணமாக காங்கிரசை விட்டு ராஜாஜி விலகினார்.

3 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் மவுண்ட்பேட்டன். 1948_ல் அவர் லண்டனுக்கு திரும்பியதைத் தொடர்ந்து, ராஜாஜி கவர்னர் ஜெனரல் ஆனார். 1950_ம் ஆண்டு ஜனவரி 26_ந்தேதி இந்தியா குடியரசு நாடாகி, இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக ராஜேந்திரபிரசாத் பதவி ஏற்கும் வரை கவர்னர் ஜெனரல் பதவியை ராஜாஜி வகித்தார்.

1952 பொதுத்தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்வி எதிர்க்கட்சிகள் ஐக்கிய முன்னணி அமைத்துப் போட்டியிட்டதன் விளைவாக காங்கிரசுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையைப்போக்க, ராஜாஜியைக் காமராஜர் அழைக்க, அவரும் சென்னை வந்து மாணிக்கவேலரின் காமன் வீல் கட்சி, ராமசாமி படையாச்சியின் உழைப்பாளர் கட்சி ஆதரவுடன் காங்கிரஸ் மந்திரிசபை அமைத்தார்.

அப்போது அவர் அறிமுகப்படுத்திய புதிய கல்வித் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. காங்கிரசுக்குள்ளும் எதிர்ப்பு. எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு. இதன் எதிரொலியாக 1954_ல் ராஜாஜி பதவி விலகினார். காமராஜர் முதல்_அமைச்சரானார். காங்கிரஸ் கொள்கைகளில் ராஜாஜிக்கு கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், "சுதந்திரா கட்சி"யை தொடங்கினார்.

1967 தேர்தலின்போது, தமிழ்நாட்டில் தி.மு.. தலைமையில் எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டி, "ஐக்கிய முன்னணி" அமைப்பதில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். அந்தத் தேர்தலில்தான் தி.மு.கழகம், ஆட்சியைக் கைப்பற்றியது. வெளிநாடுகளுக்கே செல்லாமல் இருந்த ராஜாஜி, 1962_ல் தமது 83_வது வயதில் அமெரிக்கா சென்றார்.

அமெரிக்க ஜனாதிபதி கென்னடியை சந்தித்து, அணு ஆயுதங்களை ஒழிக்கும்படி வற்புறுத்தினார். 1963_ல் அணுகுண்டு சோதனை தடை ஒப்பந்தம் அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையே கையெழுத்து ஆனபோது, "இந்த ஒப்பந்தம் ஏற்பட தூண்டுதலாக இருந்தவர் ராஜாஜி" என்று கென்னடி குறிப்பிட்டார்.

வெளிநாட்டுப் பயணத்தின்போது, ரோம் நகரில் போப் ஆண்டவரை ராஜாஜி சந்தித்துப் பேசினார். ராஜாஜி தமிழ் இலக்கியத் துறைக்கு பெரும் பணி ஆற்றி உள்ளார். அவர் எழுதிய சக்கரவர்த்தி திருமகன் (ராமாயணம்), வியாசர் விருந்து (மகாபாரதம்) இரண்டும் பெரும் புகழ் தேடிக்கொடுத்தன. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

"குடி கெடுக்கும்கள்", "திக்கற்ற பார்வதி", "கண்ணன் காட்டிய வழி", "சிறையில் தவம்", "குட்டிக் கதைகள்", "உபநிடதப் பலகணி", "சிசு பரிபாலனம்", "தமிழில் முடியுமா?" முதலிய நூல்கள் அவரது நூல்களில் குறிப்பிடத்தக்கவை. முதன் முதலாக "பாரத ரதனா" விருது பெற்றவர் ராஜாஜிதான். தனது கருத்துக்களைத் தயங்காமல், துணிச்சலுடன் எடுத்துக் கூறி வந்தார்.

அவர் எளிமையாக வாழ்ந்தார். சென்னை தி.நகர் பசுல்லா ரோட்டில் 50 ரூபாய் வாடகையில் சிறிய வீட்டில் வசித்தார். முதல்_அமைச்சரான பிறகும் அதே வீட்டில்தான் வசித்தார்.

No comments:

Post a Comment