Monday 10 March 2014

கவிஞர் நா. காமராசன்-தமிழ் அறிஞர்கள்



கருப்பு மலர்கள் என்னும் கவிதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலகில் தன்னை புதுக்கவிஞனாக அறிமுகப்படுத்திக் கொண்டவர் கவிஞர் நா. காமராசன்.
கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். உருவக அணியை உத்தியாக வைத்துக்கொண்டு உரைநடைக் கவிதை வடித்திடும் உயரிய கவிஞர். இன்றைய புதுக்கவிஞர்களின் வரிசையில் முன்னனியில் நிற்பவர் நா.காமராசன். இவர் ஒரு உருவகக் கவிஞர் ஆவார்.
மறுமலர்ச்சி யுகத்தின் கவிஞராகத் திகழும் காமராசன் அவர்கள் மரபுக் கவிதைகளையும் புதுக் கவிதைகளையும் எழுதி தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துள்ளார்.
தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதி வந்த இவர் காலப்போக்கில் வசனகவிதை, புதுக்கவிதை ஆகிய துறைகளுக்கு மாறி அவற்றிலே தம் சிறப்பை வெளிப்படுத்தினார். "கவியரசு" என்ற பட்டம் பெற்ற காமராசன் அழகான கவிதைகளால் பொருத்தமற்ற கொள்கைகளைச் சாடுபவர். மேலும் இவர் சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி, புதுக்கவிதை ஆசான் என்றும் அழைக்கபட்டார். இவர் கவிதைகளில் வேகம் அதிகம் இருக்கும்.
பிறப்பு: 1942 ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி தேனி மாவட்டம் போடிநாயக்கனூருக்கு அருகிலுள்ள பி.மீனாட்சிபுரம் என்னும் கிராமத்தில் நாச்சிமுத்து - இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர்.
கல்வி: 1964ஆம் ஆண்டில் மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் மாணவராக இருந்த பொழுது நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொண்டு காலில் விலங்கிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். கல்லூரி காலங்களில் ஜூனியரான விருதுநகர் பெ.சீனிவாசன், கா.காளிமுத்து, ஆகியோர்களுடன் மிக நெருக்கமாக இருந்தவர்.
விரிவுரையாளர் பணி: தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற இவருக்கு தான் படித்த தியாகராஜா கல்லூரியே விரிவுரையாளர் பணியும் வழங்கியது. 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு இந்திய அரசியல் சட்ட நகலை தீயிட்டு எரித்த காரணத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வந்தபோது கல்லூரி நிர்வாகத்துக்கிடையே ஏற்பட்ட பிரச்னையில் என் தமிழ் உணர்வுகளை மறைத்துக் கொண்டு என்னால் பணியாற்ற முடியாது என்று சொல்லி பதவி விலகினார்.
அப்போது மதுரைப் பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் கவிஞரை அழைத்து "உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் உன்னைப் பற்றி சொல்லியிருக்கிறேன் நீ அங்கே போய் விரிவுரையாளர் பணியில் சேர்ந்து கொள்' என்று சொன்னார். அதன்படியே உத்தமபாளையம் சென்று அந்தக் கல்லூரியில் பணிபுரிந்தார்.
திருமணம்: பேராசிரியர் இலக்குவனார் தலைமையில் 1967ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி தேனி மாவட்டம், உ. அம்மாபட்டியில் வசிக்கும் தா. பொம்மையன் மகள் லோகமணியை வாழ்க்கை துணைவியாக ஏற்றுக்கொண்டவர், இவரது மகள் தைப்பாவை எம்.பி.ஏ. முடித்துவிட்டு வங்கி ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது கணவருடன் சின்னாளப்பட்டியில் வசித்து வருகிறார். மக தீலீபன் சி.ஏ. படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். மனைவி, மகன், மருமகள் பிரியா, பேத்தி கீர்த்தனா என எல்லோரும் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.
அரசு பணி: கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும், "நீ கல்லூரியில் பணியாற்றியது போதும் உடனே புறப்பட்டு சென்னை வா' என்று சொல்லி தமிழக அரசின் மொழி பெயர்ப்புத்துறையில் அதிகாரியாக பொறுப்பேற்க வைத்தார்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே கவிதை எழுதத் தொடங்கிய கவிஞர் சென்னை வந்த பின்பு நிறைய எழுத ஆரம்பித்தார். அவைகள் "தாமரை', "கணையாழி', "கண்ணதாசன்', "கசடதபற' போன்ற இலக்கியப் பத்திரிகைகள் அனைத்திலும் என் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன.
இந்த நிலையில் கவிஞரின் முதல் கவிதைத் தொகுதியான "கறுப்பு மலர்கள்' தொகுதியை மதுரையில் நடந்த விழாவில் கலைஞர் வெளியிட்டார். சென்னையில் உள்ள கோகலே அரங்கில் நெடுஞ்செழியன் தலைமையில் "கறுப்பு மலர்கள்' பற்றிய திறனாய்வுக் கூட்டமும் நடந்தது. சிறந்த இலக்கியப் படைப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ விருதும் "கறுப்பு மலர்கள்' தொகுதிக்குக் கிடைத்தது.
திரைத்துறை: முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் "நீதிக்குத் தலை வணங்கு' படத்துக்கு நீங்கள் பாடல் எழுத வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து "கனவுகளே ஆயிரம் கனவுகளே....' என்று தொடங்கும் பாடல் "சூப்பர் ஹிட்'டாகி கவிஞருக்கு நல்ல அறிமுகத்தை தேடித் தந்தது. தொடர்ந்து "ஊருக்கு உழைப்பவன்', "பல்லாண்டு வாழ்க', "இதயக்கனி' "நவரத்தினம்' போன்ற பல எம்.ஜி,ஆர். படங்களில் பாடல்கள் எழுதினார்.
திடீரென ஒரு நாள் எம்.ஜி.ஆர். கவிஞரை அழைத்து அதிமுகவில் சேரும்படி அழைக்க, சற்று தயங்கினார். அப்போது எம்.ஜி.ஆர் "நீங்கள் கலைஞர் மீது அபிமானம் உள்ளவர் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்களைப் போன்ற படித்தவர்கள் எல்லாம் கட்சிக்கு வந்து பணியாற்றி கட்சியை வளர்க்க வேண்டும். உங்கள் குடும்பத் தேவைகள் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். தைரியமாக வாருங்கள்' என்றார். இதையடுத்து கவிஞரும் அரசாங்க பணியை ராஜிநாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்தார். சொன்னபடியே எம்.ஜி.ஆர். வீட்டு வாடகையிலிருந்து குடும்பத்துக்குத் தேவையான அனைத்தையும் கவனித்துக் கொண்டார்.
அரசாங்க பணியை ராஜிநாமா செய்த பிறகு "சோதனை' என்ற பெயரில் சொந்தமாக ஒரு பத்திரிகை ஆரம்பித்தார். மாதத்தின் பெரும்பாலான நாட்கள் பொதுக்கூட்டங்கள் பேச வெளியூர் சென்ற காரணத்தால் பத்திரிகையில் முழு கவனம் செலுத்த முடியாத காரணத்தால் மூன்றாவது இதழுடன் பத்திரிகையை நிறுத்தும்படியாகிவிட்டது.
எம்.ஜி.ஆர். முதல்வரானதும் படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு நிறைய வெளிப்படங்களுக்கும் பாடல்கள் எழுதி வந்தார். குறிப்பாக ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் நிறைய வாய்ப்புக்களை வழங்கி வந்தார். இசையமைப்பாளர் இளையராஜாவும் நிறைய பாடல்கள் எழுத வாய்ப்புகளை அளித்தார். பொதுக்கூட்டம் பேச வெளியூர் சென்ற காரணத்தாலேயே பல படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பையும் இழந்திருக்கிறார்.
இளையராஜா இசையில் "நல்லவனுக்கு நல்லவன்' படத்தில் "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது' என்ற பாடல் பிரபலமடைந்து நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதேபோல் கமல் நடித்த "காக்கி சட்டை' படத்தில் "வானிலே தேன் நிலா ஆடுதே பாடுதே' என்ற பாடல், "அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் இடம் பெற்ற "முத்துமணிச்சுடரே வா', "வெள்ளை ரோஜா' படத்தில் இடம் பெற்ற "ஓ மானே மானே' போன்றவை கவிஞருக்கு நல்ல புகழைப் பெற்றுத் தந்த பாடல்களில் சில. "பாடும் வானம்பாடி' படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிஞரே எழுதியுள்ளார்.
இதுவரை சுமார் நூற்றிஇருபதுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான "வண்டிச்சோலை சின்ராசு' படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்குப் பிறகு சினிமாவுக்கு பாடல் எழுதவில்லை. தானாக யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டு செல்லாத கவிஞர் பஞ்சவர்ணம் என்ற படத்துக்கு கதை வசனமும் எழுதியியுள்ளார்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கதர் வாரிய துனைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் அதிமுகவில் பல்வேறு பதவியில் வகித்துள்ளார். 1990ல் மாநில மாணவர் அணி மற்றும் மாநில இலக்கிய அணி செயலாளராக பதவி வகித்துள்ளார். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கையில் பல விருதுகளை பெற்றுள்ளார், 1991-ல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்.
படைப்புகள்: கறுப்பு மலர்கள், கிறுக்கல்கள், நாவல்பழம், மகாகாவியம், சுதந்திரதினத்தில் ஒரு கைதியின் டைரி, தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும், சூரியகாந்தி, சகாரவைத் தாண்டாத ஒட்டகங்கள், ஆப்பிள் கனவு, அந்த வேப்பமரம், காட்டுக்குறத்தி போன்ற முப்பத்து இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.
பெரியார் காவியம் இவரது கவிதை தொகுப்புகள் சிலவற்றை தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு தமிழ் புத்தகத்தில் பாடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டங்கள்: உருவகக் கவிஞர், கவியரசு, சோசலிசக் கவிஞர், புதுக்கவிதை ஆசான் என்னும் பட்டங்களுக்குரியவர்.
இவரது பாடல் இடம்பெற்ற சில திரைப்படங்கள்: நீதிக்குத் தலைவணங்கு, பல்லாண்டு வாழ்க, இதயக்கனி, இன்று போல் என்றும் வாழ்க, நவரத்தினம், ஊருக்கு உழைப்பவன், வெள்ளைரோஜா,கோழிகூவுது, நல்லவனுக்கு நல்லவன், இதயகோவில் உதயகீதம், நான் பாடும் பாடல், பாடும் வானம்பாடி, தங்கமகன், அன்புள்ள ரஜினிகாந்த், கை கொடுக்கும் கை, காக்கிச்சட்டை, காதல்பரிசு, முந்தானை முடிச்சு, வாழ்க வளர்க, பெரியவீட்டு பண்ணக்காரன், எங்கவீட்டு காவக்காரன், அன்புக்கட்டளை.
விருதுகள்: இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர், கதர் வாரியத் துணைத்தலைவர் என்று பல பொறுப்புக்களை வகித்த கவிஞர் தமிழக அரசின் கலைமாமணி விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, பாரதிதாசன் விருதையும் பெற்றுள்ளார்.
பாராட்டு: "தன் கால்களில் இரத்தம் கசியக்கசிய பழைய முட்பாதைகளில் முன்னேறி முதலில் புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவன் காமராசன் தான் என்பதை மூர்ச்சை அடைந்தவன் கூட மறந்து விடக் கூடாது" என்று கவிஞர் வைரமுத்துவால் புகழப்பட்டவர்.
விலை மகளிர் குறித்த இவரது கவிதை அனைவராலும் பாராட்டப்பெறும் ஒன்றாகும்.
"பாற்கடல் அழுதத்தைதேவர்கள் சுவைத்து
விட்டதால்தான்
எங்கள் இதழ் அழுதத்தை அரக்கர்களுக்கு
வழங்குகிறோம்.
எங்களுடைய நீதிமன்றத்தில்தான்
ஒழுக்கம் தண்டிக்கப்படுகிறது.
நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம்
ஆடை வாங்கவதற்காக."
இவரது கறுப்புமலர் புத்தகத்தில் திருநங்கைகள் பற்றி இவர் எழதிய கவிதை பலரால் பாரட்டப்பெற்றது. இலக்கியத்துறை, திரைப்படத்துறை, அரசியல்துறை ஆகியவற்றில் கால்பதித்து முத்திரை பதித்தவர், இவர் சிறந்த பேச்சாளர்.

No comments:

Post a Comment